சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது.
சங்கதாரா என்ற போது சாரங்கதாரா என்ற படத்தின் பெயர்தான் நினைவுக்கு வரலாம். சிவாஜி நடித்த படம், சிவாஜியின் தந்தையின் மனைவி சிவாஜியை கரெக்ட் செய்ய முயற்சிக்கும் ராஜபுத்ர கதை. வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே இடம் பெற்ற படம். பொன்னியின் செல்வனில் கூட நந்தினி வீர பாண்டியனின் மனைவியா, மகளா அல்லது இரண்டுமேவா என்ற ஓர் ஏடாகூடா உறவு உண்டு. பெயரிலேயே ஒரு கிளுகிளுப்பு வந்திருக்க கூடும்.
சிறுவயதில் கண்ட கண்ட புத்தகங்களைப் படித்த போது பொன்னியின் செல்வனையும் படித்திருந்தாலும் இரண்டாம் வாசிப்பு பணியில் சேர்ந்த பின் தான். அந்த கதையை படிக்க ஆரம்பித்த போது எந்த சூழலிலும் ஏடு தந்தானடி தில்லையிலே என்று பாடும் எஸ், வரலட்சுமியின் முகம் எனக்குத் தோன்றவே இல்லை.
நான் பள்ளியில் படிக்குபோது சில நண்பர்கள் உண்டு. அவர்களின் தாயார்கள் அவர்கள் மீது அதீத பாசம் கொண்டவர்கள். எந்த அளவுக்கு என்றால் கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு விளையாட வருபவனை யாருக்கும் பேட்டை கொடுத்து விடாதே, உடைத்து விடுவார்கள் என்று அட்வைஸ் செய்வார்கள். பள்ளிக்கு தீனி கொடுத்து விடும்போது யாருக்கும் கொடுக்காமல் நீ மட்டும் சாப்பிடு என்று சொல்லி அனுப்புவார்கள். அதுவும் என்னை மாதிரி பசங்களின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காக சொல்லுவது போல சொல்லுவார்கள்.
அது போன்ற பாசமிகு தாயார், தமக்கை பாத்திரமாகவே எனக்கு குந்தவை , பாத்திரம் தோன்றியது. இத்தனைக்கும் பொன்னியின் செல்வனில் குந்தவைதான் பெரிய பாத்திரம், பொன்னியின் செல்வனை விட பெரிய ஹீரோ அவர்தான். எனக்கு படிக்கும் போதே கொஞ்சம் சுய நலம் பிடித்த பிறரை மதிக்காத அரசியல்வாதியாகவே தோன்றினார். கதையின் போக்கு செல்லச் செல்ல பல பிரச்சனைகளையும் வரும்முன் தடுக்காமல் இவரே வளரவிட்டு சரிசெய்து தனது ஹீரோயிசத்தை தக்க வைத்துக் கொள்கிறாரோ என்று தோன்றியது.
நாவல் முடிக்கும்போது ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. முடிந்த பின் கல்கியின் முடிவுரையில் ஒரு கூற்றினைக் கொடுத்திருந்தார். சேந்தன் அமுதனும், மதுராந்தகனும் ஒரே நபராக எழுத ஆரம்பித்ததாகவும் பின்னர் சிலபல விமர்சனங்களைத் தவிர்க்க தனித் தனிப் பாத்திரமாகவும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆம் அதே போல நந்தினியும், குந்தவையும் ஒரே பாத்திரமாக இருந்திருந்து கதாசிரியர் வசதிக்காக வேறு வேறு பாத்திரமாக மாற்றி விட்டாரொ என்ற எண்ணம் தோன்றியது போது தான் அந்த விபரீத கற்பனை தோன்றியது. குந்தவை தான் நந்தினிதான் என்றால் நந்தினிதான் கொலை குற்றவாளி என்றால் .............., உண்மை கொலையாளி யார்?
நான் எழுதினேன். 2010ல் சங்க தாரா வெளியாகியுள்ளது. கண்டிப்பாக சில பல ஆண்டுகள் உழைத்து இருப்பார். நூல் வரும்முன்பே எழுதி விட்டதால் எனது கற்பனை என்றே மனதை தேற்றிக் கொள்ள்லாம் அல்லவா?
கல்கியின் எழுத்துக்களின் வாயிலாகவே அவர் குந்தவைதான் குற்றவாளி என்பதாக சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நம்பினேன். பணிச்சூழல் அதற்கான ஆதாரங்கள் தேடும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் தரவில்லை.
இன்றுதான் சங்க தாரா வைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010ல் எல்லாம் தினமும் பிளாக்கில் எழுதுவேன் அப்படியும் எனக்கு இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது சந்தேகங்களுக்கு பதில்களை ஆதாரத்துடன் அவித்து வைத்திருக்கிறார். குந்தவைதான் கொலைக்குக் காரணம் என்று நம்பினாலும் யாரை வைத்து கொன்றிருப்பார்? அதற்கான சூழல் எப்படி அமைந்திருக்கும் ? என்பதற்கான விடையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
நந்தினி வீரபாண்டியனுக்கு மகளாகவும் மனைவியாகவும் இருந்தது போல பொன்னியின் செல்வம் போகும் . அதே நந்தினி ஆதித்ய கரிகாலனுக்கு சகோதரி போலவும் காதலி போலவும் கதையில் தோற்றம் வரும். நான் வேறு குந்தவையும் நந்தினியும் ஒருவரே என்று முழுக்க முழுக்க நம்ப வருகிறேன். கல்கி வேறு நந்தினி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று சொல்லி விட்டார்.
சங்க தாராவிலும் நந்தினி போன்ற இரண்டு பெண்கள் வருகிறார்கள். குணாதிசிய அடிப்படையில் இரண்டு கதையிலும் குந்தவை ஒருவராகவே வருகிறார். குந்தவை தொடர்புடைய காட்சிகள் சில அப்படியே பொன்னியின் செல்வனிலிருந்து அதே நேரத்தில் மாற்றுக் கோணத்தில் தரப் பட்டுள்ளது. சில பல இடங்களில் ஆதாரங்கள் தரப் பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் வயது இரண்டு கதைகளிலும் மாறுபாடு நிறைய கொண்டுள்ளது.
சாம்பவி பாத்திரம் சங்கதாராவில் புதியது. ஆனால் இது போன்ற பாத்திரங்கள் சரித்திரக் கதையில் தவிர்க்க முடியாதது. கதையில் வரும் சம்பவங்களை கோர்வைப் படுத்த இத்தகைய பாத்திரம் அவசியம். நாம் சிறுவயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் பார்த்த போது அதில் காலச் சக்கரமே வந்து அந்த வேளையைச் செய்யும். ஆனால் சாம்பவி பாத்திரத்தின் பின்புலம் சற்றும் எதிர்பாராதது. அதுவும் பொன்னியின் செல்வனின் பாத்திரப் படைப்பில் இருந்தே இதை கொண்டு வருகிறார். சாம்பவியின் ரகசியத்தை கடைசியில் அவிழ்த்தாலும் கதை படிப்பவர்களுக்கு சாம்பவியின் பின் புலம் எளிதில் புரியும் வண்ணம் ஊரறிந்த ரகசியமாகவே கொண்டு செல்கிறார்.
செம்பியன் மாதேவிக்கு குழந்தை பிறந்த சில நாட்களில் கண்டாதித்தர் காணாமல் போகும் நிகழ்வே குறிப்பிட்ட ஒரு கேள்வியை வைத்து கதையின் முடிவில் பதிலைத் தருகிறது.
சூரிய மந்திரத்தை உபயோகப் படுத்தும் போதே கதையின் போக்கு ஒரளவு யூகிக்க முடிகிறது. அதற்கேற்றார்போல் ஓராண்டு சண்டி விரதமும் வருகிறது. கதை முடிந்தபின் மலேசியாவில் உள்ள கல்வெட்டுக்களை ஆதாரமாக காட்டுகிறார் கதாசிரியர்.
ஆதித்ய கரிகாலனின் கோபமும், அவரது சிறந்த பண்பு நலன்களும் இதில் கூறப் பட்டுள்ளது. ஆனால் அவரது நற்பண்புகளுக்கு ஆதாரம் கதையில் கொடுக்கப் படவில்லை. நாயகனின் நற்பண்புகளுக்கு ஆதாரமும் தேவையில்லையே.
வந்தியத் தேவனின் பாத்திரம் தியாகம் செய்வதற்கே அவதாரம் எடுத்தது போல கல்கி அமைத்திருந்தாலும் வந்தியத் தேவனின் கத்தியால்தான் ஆதித்ய கரிகாலன் இறந்ததாக கதை அமைத்திருப்பார். அதுவும் கூட நான் குந்தவையை சந்தேகப் பட ஒரு காரணம். சங்கதாராவில் வந்தியத்தேவனை ஒரு டபுள் ஏஜண்டாகவே காட்டியிருக்கிறார்கள். அவரிடம் இரண்டு சத்தியங்கள் கல்கி காட்டியிருக்கும் பல ஆதாரங்களை மெய்ப்பிக்கின்றன்.
ஆதிச் சோழன் கதையையும் கூட எடுத்தாண்டிருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா
கதாசிரியர் பல இடங்களில் சொந்தக் கவிதைகளைப் போட்டு இடம் நிரப்பியிருக்கிறார்
அந்த இடுகையை எழுதிய போது பின்னூட்டத்தில் ப்ரூனோ கேட்டிருந்தார். குந்தவையை சந்தேகப் படும் நீங்கள் ஏன் அருண்மொழியை சந்தேகப் படவில்லை என்று. நான் உடனடியாக அவர் அக்காபிள்ளை, தனியாக சந்தேகப் பட ஒன்றும் இல்லை என்று. .சங்கதாராவில் இதற்காக ஒரு கல்வெட்டே ஆதாரமாக இருக்கிறது.
கதையில் விரு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. காலச் சக்கரம் நரசிம்மாவின் உழைப்பும் கற்பனையும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. இருந்தாலும் கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் இன்னும் விலாவாரியாக விளக்கியிருக்கலாம். இது போன்ற கதைகளுக்கு பக்கங்கள் ஒரு தடையாக இருக்கக் கூடாது. கதாசிரியர் தான் சொல்ல வருவதை வாசகர்களுக்கு சோர்வு கொடுக்காமல் விளக்க வேண்டும். உடையார் முதல் பாகம் அவ்வாறான ஒரு அயர்ச்சியை கொடுக்கும்.
கிளைமாக்ஸில் குந்தவை பெரிய கோவில் நந்தியின் காதில் சொல்லும் ரகசியம் ஏற்கனவே ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு ஏற்கனவே தெரிந்ததைப் போன்ற கல்வெட்டுகள் காட்டப் படுகின்றன்.
கதையில் நெகடிவ் என்று பார்த்தால்
1.இந்த கதையின் தலைப்பு பொன்னியின் செல்வனை கொஞ்சம் கூட உறவு கொண்டாடவில்லை. சங்கதாரா சோழ மன்னர்கள் முடி சூட பயன்படுத்தும் பொருட்கள். அதை விளக்கியிருந்தாலும் கூட ஏதோ ராஜ புத்திர கதையை மொழிபெயர்த்தது போன்று தலைப்பு அமைந்துள்ளது.
2.குமுதம், ஆனந்த விகடன் போன்ற ஏதாவது ஒரு புத்தகத்தில் தொடராக வந்திருந்தால் நிறையப் பேரை சேர்ந்திருக்கும், கதையை இன்னும் நீளமாக இழுத்திருக்கலாம்.
3, கதை முடியும்போது சாம்பவி சொல்லும் விஷயங்கள், தோழிப் பெண் சொல்லும் விஷயங்கள் ஏதாவது ஒரு இடத்தில் சஸ்பெண்ஸ் வைத்து உடைத்திருக்கலாம்.
4,பல இடங்களில் வரும் சொந்தக் கவிதைகள்