Wednesday, April 3, 2013

காதல் கோவணம்

அம்மணமாக சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக் கொள்வது போன்றதுதான் காதல் திருமணம். சிலர் அந்தக் கோவணத்தைக் கழட்டி தலையில் சுற்றிக் கொள்வதாலேயே காதல் திருமணம் என்பது முழுவதும் ஒதுக்க வேண்டியது என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை.
 

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கு எதிரி என்று பார்த்தால் பெற்றோர் என்று சொல்லுவார்கள். பார்த்தால் அப்படியும் இருக்காது. கூட இருக்கும் சொந்தங்கள் பந்தங்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள். இந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையும் குறிவைத்து சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான் பெரிய எதிரியாக இருந்து இம்சை கொடுப்பார்கள். இவர்களுக்கு பயந்துதான் பெரும்பாலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்., கருணைக் கொலைகள் தான் ஒரு மானஸ்தன் என்பதை  தன் சாதிக்காரனுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். 

200- 300 கிமீ தள்ளி உள்ள, சில நேரங்களில் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெண்ணையோ, மாப்பிள்ளையையோ மெட்ரிமோனியலில் தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இருந்த ஒரே காரணத்துக்காக மணம் முடித்து வைக்கும் பெற்றோர்களால் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ திருமணம் முடித்து வைக்க முடியவில்லை? இந்த சுற்றமும் சூழ நிற்கும் கூட்டங்களால் வந்த வினைதான் இது. 

தங்கள் சாதியிலேயே திருமணம் செய்து கொண்ட பலரையும் பாருங்களேன். அவர்களது கஷ்ட காலங்களில் இந்த சுற்றமும் சூழ வந்து கும்மியடித்தவர்கள் யாராவது வந்து உதவி செய்து இருக்கிறார்களா என்று?   காதல் திருமணம் செய்தவனானாலும், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் அவனவனாகப் பார்த்து அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தால்தான் உண்டு.

அப்புறம் எப்படித்தான் இதைத் தாண்டுவது எனப் பாருங்கள்.  காதலிப்பவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு வேலை தேடிக் கொண்டு பிறந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் நகரத்துச் சென்றவர்கள் காதல் திருமணம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்குக்கு போனவர்கள் கதிதான் அதோ கதி ஆகியிருக்கிறது.

சொந்த ஊர், சொந்த மண் என்ற நினைப்போடு இருந்தால் கருணைக் கொலையை  சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது, இதில் தலித், தலித் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.   ஆனால் சாதி வேறுபாடு பார்த்தல் என்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சாதி பார்க்காமல் பழகும் மக்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அப்படி சாதி பார்க்காமல் பழகுபவர்கள்கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். 

எனக்குத் தெரிந்தவரை  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்  சொந்த ஊர் பக்கம் போகாமல் இருப்பது. இருவருமே நல்ல வேலையில் இருப்பது.ஆகிய காரணங்கள் மட்டுமே அவர்களது திருமணத்தை வாழ வைக்கும். இதை பயந்து ஓடுதல் என்று நினைக்கத் தேவையில்லை. புதிய வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் உங்களை பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களும் கண்டிப்பாக உங்களுடன் வந்து மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்.  அப்படி உங்களோடு வர மறுத்தால்  பெற்றோர் பார்த்து வைத்து திருமணங்களில் எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டினால் அவர்களும் மனம் மாறக் கூடும்.

=================================================================
இன்றைய இளைஞர்கள் ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்ள எனக்குத் தெரிந்து சில காரணங்கள்.

1. அவர்களை யாருமே காதலிக்க மறுப்பது.., சிலர் சிலபல முயற்சிகள் செய்தும் பலனிக்காமல் போயிருக்கும்.

2.இதுவரைக்கும் பெற்றோர் சொன்னதை கேட்கவில்லை. இதை மட்டுமாவது பெற்றோர் விருப்பதுக்கு விட்டு விடுவோம் என்று ஒதுங்குவது ( இதில் அவர்களது சோம்பேரித் தனமும் இருக்கிறது)

3.நமக்கு நல்ல துணை கிடைத்து விட்டது. நமது சகோதர / சகோதரிக்கு நல்ல துணை கிடைக்குமா என்ற சந்தேகம். ( பம்பாய் அரவிந்த சாமி மாதிரி யாருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை)

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails