Saturday, February 4, 2017

CBSE என்ற போர்வையில் வரும் ஏமாற்று வேலை.

நீட் தேர்வு எதிர்ப்புக்கு நான் சொல்லும் முக்கிய காரணம் ஸ்டேட் போர்டு மாணவர்களை CBSE பாடத்திட்டத்தில் தேர்வெழுதச் சொல்லுவதே, நம் மக்களின் உடனடி எதிர்வினை எப்படியென்றால் எல்லோரையும் CBSE பாடத்திட்டத்திலேயே படிக்க வைக்கச் சொல்லலாமே என்கிறார்கள்.

பிதாகரசு தேற்றமோ, sin, cos, tan வகையறாக்களோ, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், அனுக்கள், பிளவுகள், போன்றவை எல்லா பாடத்திட்டத்திலும் ஒன்றுதான். வித்தியாசப் படுவது நமது மொழி, வரலாறு போன்றவைகளை படிக்கும் போதுதான் . இந்தியா போன்றதொரு மிகப் பெரிய நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமும் அடையாளங்களும் உண்டு. அவைகளை அடுத்தவர் பார்க்கும் பார்வை படு கேவலமாக இருக்கும். வடக்கிலும் தெற்கிலும் விதவை மறுமணம் ஒவ்வொரு சமூகத்திலும் எந்தப் பார்வையில் இருந்தது என்று ஒவ்வொரு 20 ஆண்டுகள் பின்னோக்கி போனாலே ஓரளவு புரியும்.

இதற்கு உதாரணமாக ஒரு முகநூல் குழுவில் நிகழ்ந்த உடையாடலைச் சொல்ல முடியும். அந்த குழுவில் நண்பர் ஒருவர் வீட்டில் வைக்கக் கூடாத கடவுள்கள் படங்கள் என்ற தலைப்பில் பழனி முருகன் மூல்வர் படத்தையும் போட்டிருந்தார்.

நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

சாஸ்திரப் படி என்றுவேறு போட்டிருந்தார். சாஸ்திரம் என்றால் எந்த சாஸ்திரம் என்று கேட்டிருந்தேன். அவரிடமிருந்தும் அந்த போஸ்ட்டை ஆஹா ஓஹோ என்று சிலாகித்து எழுதியிருந்தவர்களிருந்தும் பதில் இல்லை. அதற்கு பதிலாக என்னிடம் ஏன் விதண்டாவாதம் புரிகிறீர்கள் என்ற கேள்வியும் உலகில் பழனி முருகன் மட்டும்தான் முருகனா? வேறு முருகன் படம் வைத்து கும்பிட வேண்டியதுதானே என்று பதில் கேள்வி.

நான் எந்த கடவுளையும் இந்த போஸ்ட் மூலம் கேள்வி எழுப்பவில்லை. எனது ஊர் பழநி. பழநி முருகன் மூலவர் சிலையின் படத்தை வைக்கக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் காரணம் கேட்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய கடமை போஸ்ட் போட்டவருக்கும் ஆதரித்து குரல் எழுப்புவர்களுக்கும் இருக்கிறது. பதிலைச் சொல்லுங்கள் என்று உறுதியாக  நின்றேன்.

இப்போது வேறு மாதிரியான பதில் வருகிறது. துறவிக் கோலத்தில் நிற்கும் முருகனைப் பார்த்தால் நெகடிவ் இம்பாக்ட் வரும். உங்களுக்கு விருப்பம் என்றால் வைத்துக் கொண்டு கஷ்டப் படுங்கள் என்ற மிரட்டலான பதில். பல மடாதிபதிகளும் துறவிக் கோலத்தில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் படங்களுக்கு இல்லாத ஒரு பயமுறுத்தல் தத்துவம் பழநி முருகன் மூலவர் படத்திற்கும், இன்ன பிற  சக்தி வடிவங்களுக்கும் தருகிறார்கள். அந்த  செய்தி படிக்கும் பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் கிடைத்திருக்கும். இது ஒரு வகையான மென்மையான மூளைச் சலவை.

இன்று படத்தை வைக்கக் கூடாது என்பார்கள். அடுத்து நல்ல காரியங்களுக்கு வைக்கக் கூடாது என்பார்கள். பின்னர் நல்ல காரியம் முடிந்த பின் போகக் கூடாது என்பார்கள். படிப் படியாக அவர்கள் தெய்வத்தை திணிப்பார்கள்.

பழநியிலேயே பழநியாண்டியை தரிசிக்க அந்த அலங்கார நேரத்திற்கு செல்லும் நபர்கள் நிறைய உண்டு. திருமணம் முடிந்த கையோடு வனதுர்க்கை கோயிலுக்கும் பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் செல்பவர்கள் பல குடும்பங்களை நான் அறிவேன். அந்தக் குடும்பங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

இதெல்லாம் அவர்கள் புரியாதது போலவே தமிழ் கடவுள்களை மட்டம் தட்டுவார்கள்.

இதுதான் CBSE க்கும் ஸ்டேட் போர்டுக்கும் உள்ள வித்தியாசம். தமிழ்நாட்டு பாடத்திட்டம் சரியில்லை என்றால் அந்த பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கணிதம், அறிவியில் ,  புவியியல், உலக வரலாறு ஆகிய பாடங்களை பொதுமைப் படுத்தலாம். மொழி, பிராந்திய வரலாறு போன்றவைகளை அந்த் அந்த மாநிலங்களிடம் விட்டுவிடலாம். மருத்துவக் கல்லூரி தரம் போதாது என்றால் மருத்துவக் கவுன்சில் மூலமாக தரமுயர்த்தலாம்.

அதை விடுத்து விட்டு ஸ்டேட் போட்டு மாணவனை CBSEல் தேர்வு எழுதச் சொல்லுவதுதான் தரத்தை உயர்த்தும், ஊழலை தவிர்க்கும் என்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை. இதில் நீட்டை தவிர்த்தால் மாணவர்கள் பல தேசிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற மிரட்டல் வேறு. நீட்  என்ன மாதிரியான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, நீட்டைத் தவிர்த்தால் இழக்க என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தமிழக அரசு காசு போட்டி கட்டி நடத்தும் மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சேர CBSE தேர்வினை எழுத வேண்டும் என்ற ஏமாற்றுத்திட்டமான நீட்டை நாமெல்லாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails