Thursday, June 2, 2011

சாண்டில்யனின் கடல்புறா - ஒரு வாசகனின் அனுபவம்

இளைய பல்லவன்

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த களப்போர் என்ற வாக்கியத்தோடு கடல்புறா தொடங்குகிறது. சாண்டில்யன் ஒரு இளமைதுள்ளும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக அந்த வரிகள் விளங்குகின்றன்.  காஞ்சியில் சோழமன்னன் குலோத்துங்கள் இருக்கும்போதே அவனது படைகள்  கலிங்க நாட்டை அழித்தது என்று கலிங்கத்து பரணியில் பாடி இருக்கிறார்களாம். அதைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று நினைத்தால் கூடவே இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார். அதாவது காஞ்சி என்பது பெண்களில் அணியும் ஒரு ஆபரணம். கலிங்கம் என்பது ஆடை. ஆக பெண்ணின் நகை களையாமல் உடைகள் குலைந்த களப் போர்.  என்பதாக அந்த வாக்கியத்தைக் குறிக்கிறார். முதல் வரி படிக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இதைப் படித்திருந்தால் நமது அறிவு மேலும் வளர்ந்திருக்குமே என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது.


பாலூர் துறைமுகம். பாலூரா துறைமுகம் என்றழைக்கப் படும் இடத்தில் நமது கதை துவங்குகிறது அந்த இடம் கோதாவரி ஆற்றின் முடிவில் இருக்கிறதாம். கோதாவரி ஆற்றீன் துணையாறுகள் கலந்து கடலில் கலப்பதையே புணர்தலுக்கு ஒப்பிடுகிறார் நாவல் ஆசிரியர். சித்திரா பவுர்ணமியின் அதிகாலை வேளையில் கடற்கரையை ஒப்பிட்டு அந்த இடத்தையே நம் கண்முன்னால் கொண்டுவரும் அவர் கிரேக்க, அரேப்பிய சீன் வணிகர்களையும் அவர்தம் தோற்றம்,. ஆடைகள் ஆகியவை பற்றி விளக்குகிறார்.  அதே  நேரத்தில் பேய் அடிமைகள் என்றொரு பதத்தினை அவர் உபயோகப் படுத்துகிறார். அவர்கள் நீக்ரோக்கள் ( எனது ஒரு இடுகையின்போது இந்தப் பதத்தினை நீக்குமாறு நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், அப்போது நீக்கிவிட்டேன். இப்போது இதற்கு பதிலாக வேறுபதம்  எனக்கு தெரியாத காரணத்தாலும் நாவலாசிரியர் உபயோகப் படுத்தியதாலும் அப்படியே எழுதியுள்ளேன். ) அவர்களை அரேபியர்கள் சீனர்களுக்கு விற்றதாக புதினத்தில் சொல்லப் பட்டுள்ளது.  ஆந்திர மக்களும் வட நாட்டினரும் கூட வாணிகம் செய்ய இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும். மேலைதேசம், கீழைநாட்டினரும் கலந்து இருந்த இடமாக இருந்தாலும் தமிழ் மக்கள் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே அந்த இடம் பாலூர் என்று அழைக்கப் பட்டதாக கூறியுள்ளார்.

கடல், கரை, மக்கள் , வாணிகம் ஆகியவற்றை விளக்கிவிட்டு நாயகன் அறிமுகம் செய்கிறார்.  ரஜினியின் அறிமுகக் காட்சியை விட விஜய் அறிமுகக் காட்சியை விட, ஏன் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் அறிமுகக் காட்சியை விட இந்த கதை நாயகனின் அறிமுகக் காட்சி அமர்களமாக அமைந்திருக்கிறது.  ஒரு படகில் இருந்து புரவியுடன் நாயகன் இறங்கி வருகிறார். அவர் கால் வைத்த உடனேயே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப் பட்டதாகவும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகரித்து விட்டதாகவும் சூரியனின் ஒளிக் கதிர்களுக்கே ஒளிவந்ததாகவும் சொல்லுகிறார். நெற்றி, முடி, கன்னம் கன்னத்தழும்பு என வர்ணித்துவிட்டு அவருக்கு வயது 21 என்று சொல்லுகிறார். மக்களே குறித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 21 வயதில் ஒரு ஆண்மகனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பது போகப் போக்த் தெரியும்.

அவர் கையில் வைத்திருக்கும் வாளினை விளக்கும்போது அவர் ஒன்று ஏழையில்லை என்று சொல்லி வர்ண்னை செய்கிறார்,.  அவரது வாளின் வர்ணனையே பிரமிப்பாக இருக்கிறது . இந்த வாளின் வர்ணனைகளை ராணாவிற்கு அப்படியே உபயோகப் படுத்திக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.

அடுத்ததாக அந்த வீரர் சுங்கச் சாவடிக்குள் நுழைகிறார். அந்த சாவடியை மண்டபம் என்றே நமக்கு ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார். அங்கு சுங்கப் பணம் வசூலிக்கப் படுவது, சுங்க முத்திரை இடப் படுவது என்பது பற்றியெல்லாம் சொல்லப் படுகின்றன.

ஒரு நாவலில் சொல்ல வேண்டிய இடங்களில் கதைகளோடு இன்னபிற பல செய்திகளும் பதியப் பட வேண்டும் என்பதில் ஆசிரியர் முனைப்புடனேயே இருக்கிறார். கடல்புறா முடிக்கும்போது நாம்  11ம்நூற்றாண்டின் பல செய்திகளையும் நம்மோடு  உள்வாங்கிக் கொண்டிருப்போம் என்றே நம்பலாம்.


நமது நாயகர் வணிகரல்லாத பயணிகளின் பரிசோதனைப் பகுதிக்கு வந்து தன் உடமைகளைப் பரிசோதிக்க கொடுத்துவிட்டு முத்திரை மோதிரத்தைக் காட்டுகிறார். அந்த முத்திரை மோதிரத்தைப் பார்த்த உடன் அந்த அதிகாரி நமது வீரரை தனியே அழைத்துச் செல்லுகிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது தனது இடத்தில் வேறொரு நபரையும் இறுத்திச் செல்வதையும் நாவலாசிரியர் சொல்லிச் செல்லுகிறார். பதிலி நபர்கள் என்னேரமும் தயாராக இருக்கும் செய்தியையும் ஒவ்வொரு இடத்திலும் மக்களுக்கு சேவை செய்ய தேவையான நபர்கள் எந்நேரமும் இருக்கும் வகையிலும் திடீரென தற்செயல் விடுப்பு எடுத்தால் கூட அந்த இடத்திற்கு வேறொரு நபர் உடனடியாக பணியாற்றும் வகையில் செயல் பாடு இருந்தததையும் நம்மால் உணரமுடிகிறது.

தனியே அழைத்து வந்து மோதிரத்தின் மதிப்பைப் பற்றி கேட்கிறார் அந்த அதிகாரி. நமக்கென்னவோ  அதிலிருந்து பெர்செண்டேஜ் கேட்பார் போல என்று தோன்றியது. அதே எண்ணம்தான் வீரருக்கும் தோன்றியிருக்கும் போல ஆயிரம் பொற்கழஞ்சுகள் என்று மதிப்பைச் சொல்லி அதற்கும் வரிவிதித்தால் கட்டி விடுவதாகச் சொல்லுகிறார்.

அதிகாரி  இப்போது தெளிவாக அந்த மோதிரத்தை, முத்திரை ஒரு சிலரே அணிய முடியும் அதனால் கேட்டதாக சொல்ல அது தனக்குத் தெரியும் என்று வீரர் கூறுகிறார்.  அதுவும் ராஜ வம்சத்தினர் தான் என்று சொல்லி விட்டு தாங்கள் என்று ஒரு இழு இழுக்கிறார்,

கருணாகரப் பல்லவர் என்று பதிலைச் சொல்லுகிறார்.  இளைய பல்லவரா? என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்கிறா.  பிரமிப்புடன் இருக்கும்போதே இளைய பல்லவர் விடைபெற்றுக் கொள்ள தாங்கள் போகப் போகும் இடம் எது என்று கேட்கிறார் சுங்க அதிகாரி. அதற்கு இவர்  கோடிக்கரை கூளவாணிகன் மாளிகை என்று கூறுகிறார். அபப்டியென்றால் எனது வீட்டில் தங்கி நடு இரவில் செல்லுமாறு சொல்லுகிறார்.  ஏன் இப்போது செல்லவேண்டாம் என்று கேட்கும்போது  அந்த சுங்க அதிகாரி சில விஷயங்களை சொல்ல அந்த கலிங்க பீமனுக்கு அவ்வளவு துணிச்சலா என்று உரக்கச் சொல்லி விடுகிறார். அது கலிங்க சுங்கச் சாவடி ஆகையால அங்கிருக்கும் கலிங்க வீரர்கள் வாளுடம் அவரை நெருங்குகிறார்கள் இப்போது இந்த பகுதி முடிவடைந்து தொடரும் போடப் படுகிறது.


இப்போது நம் மனதில் எழக்கூடிய கேள்விகள். பதில்கள்

1.யார் இந்த இளைய , கருநாகர பல்லவர்.? பொதுவாக கருநாக என்று பெயர் வைத்திருந்தால் சரித்திர கதைகளில் வில்லனாகத்தான் இருப்பார்.

2.அவர் ஏன் கலிங்க துறைமுகத்திற்கு வருகிறார்?  அவர் வந்ததால்தான் இந்தக் கதை இந்த இடத்தில் துவங்கி இருக்கிறது.

3 சுங்க அதிகாரி ஏன் இளைய பல்லவரை ஓரம் கட்டுகிறார்? நடுநிசிவரை வீட்டில் மறைந்திருந்து இரவில் பயணம் செய்யச் சொல்ல காரணம் என்ன? இவரைப் பார்த்தால் கலிங்க தேசத் துரோகி போல் உள்ளது.

4. இளைய பல்லவருக்கு கோபம் வரும் அளவு அப்படி என்ன சொன்னார்? அது சில பாகங்களில் தெரிந்து விடக்கூடியது தான் என்றாலும் ஆவலாகத்தான் இருக்கிறது.

6 comments:

  1. நேற்றுதான் சாண்டில்யன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன். இப்படிப்பட்ட கதைகளை எழுதியவரின் வரலாறு அவருடைய நடையிலேயே அற்புதமாக வந்துள்ளது. கடல்புறா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு படித்தது. ரிப்ரெஷ் செய்து கொள்ள உதவியது உங்கள் பதிவு.

    கிங் விஸ்வா
    சென்னை சூப்பர் காமிக்ஸ் - இரண்டாம் புத்தகம் - சென்னை சூப்பர் கிட்ஸ்

    ReplyDelete
  2. கடல் புறாவினுடைய மின் இதழ் (pdf) எங்காவது கிடைக்குமா? 10 வருடங்களுக்கு முன் வாசித்தது, மீண்டும் வாசிக்க தோன்றுகின்றது....

    ReplyDelete
  3. அப்படியா! படித்துப்பார்க்க வேண்டுமே!!

    ReplyDelete
  4. Whatever it may be...However you criticize no one come near சாண்டில்யன்...

    ReplyDelete
  5. http://kumarikrishna.blogspot.com/2011/02/pdf.html

    கடல்புறா இல்லை.. ஆனால் யவனரானி இருக்கிறது..

    ReplyDelete
  6. கடல்புறா ஓவியங்களுடன் பதிவிறக்க:

    http://thamizhthenee.blogspot.com/2012/08/blog-post_29.html

    சிறந்த வாசிப்பனுபவம்..பகிர்ந்துள்ளீர்கள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails