Friday, October 7, 2016

வாழ்த்துக்கள் அம்பேத்கர் 125, தேசிய கருத்தரங்கம் நெல்லை

பத்தாம் வகுப்பில் முதல் தமிழ் வகுப்பு,உங்களில் யாருக்கு தமிழ் தெரியாது என்று ஆசிரியர் அ.ஆறுமுகம் கேட்கிறார். உடனடியாக கையைத் தூக்கிவிட்டேன்.

நான் படித்த போது சுற்று வட்டாரத்திற்கு அது ஒன்றுதான் மேல் நிலைப் பள்ளி, எனவே பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.ஒன்பதில் ஐ பிரிவு வரை உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு சூப்பர் படிப்ஸ் உருவாகியிருந்தாலும் எங்கள் பிரிவில் முதலிடம் பெறும் நான் ஒரு சூப்பராகவில்லை. அதற்கான காரணம் தமிழ். என்ன காரணத்தாலோ நிறைய தமிழ் வகுப்புகளில் வெளியே அனுப்பப் பட்டு விடுவேன். (சில பல காலங்களுக்கு பின் என்னால் காரணத்தை யூகிக்க முடிந்தது, அந்தக் காரணமாக இருக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்). தமிழில் குறையும் மதிப்பெண்ணால்தான் அந்த சூப்பர் படிப்ஸ் அங்கீகாரம் எனக்கு கிடைக்காமலேயே இருந்தது.

தமிழ் ஆசிரியர் கடுப்பாகி இருப்பார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் இல்லை என்பது பின்னர் புரிந்தது. என்னை முன்வரிசையில் தரையில் வந்து அமரச் சொல்லி விட்டார், நான் சரி என்றால் மட்டுமே வகுப்பு மேற்கொண்டு நகரும். மிகச் சிறந்த ஆசிரியர். அவரால்தான் எனக்கு அண்ணா அறிமுகம். ஏற்கனவே எம்.ஜி.ஆர் பாடல்கள் மூலம் அண்ணா என்ற பெயரும் பில்டப்பும் தெரிந்திருந்தாலும் அண்ணா என்ற ஆளுமை அவர் மூலமே அறிமுகம். யார் அவர்? எந்த சூழலில் அவர் அரசியலில் நுழைந்தார் என்பது போன்ற விவரங்கள் பாடங்களில் நடு நடுவே வந்து விழும். அவர் என்றுமே பாடத்தை விட்டு வெளியே போனதில்லை. தமிழ் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலுமே அவரது கருத்துக்களைச் சொல்லுவார். அவர் ஏற்படுத்திய ஆவலில் அண்ணாவின் எழுத்துக்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் அடுத்த ஆண்டில் இன்னோரு ஆசிரியர். அவர் மூலமே வி.பி.சிங். பற்றி உணர முடிந்தது. 93ல் இது. அதற்கு முன் எனக்கு வி.பி.சிங்கின் அறிமுகம் துக்ளக் மூலம். மண்டல் கமிஷனும் துக்ளக் மூலம். 93 களில் ஓரு இதழ் விடாமல் துக்ளக் படித்தவர்களுக்கு தெரியும். அந்த அறிமுகம் எப்படி இருக்கும் என்று,
வி.பி.சிங் பற்றிய கருத்துக்கள் மாற தொடங்கிய போது மண்டல் கமிஷன் தெரிய தொடங்கியது. இவரே அண்ணாவைச் சுற்றி பெரியாரையும், கலைஞரையும் அறிமுகப் படுத்துகிறார். கலைஞரை அறிமுகப் படுத்துகிறார் என்றால் ஒரு இலக்கிய வாதியாக, சமூகப் போராளியாக, இன்றும்கூட நமக்கு பல அரசியல் வாதிகளை அரசியல் வாதிகளாக மட்டுமே நமக்கு தெரியும். சமூக நலன்கொண்ட முற்போக்குவாதிகளாக பலருக்கும் அறிமுகம் கிட்டுவதில்லை. ஆனால் இவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். இன்றும் கூட கலைஞரை சுவாசிக்கும் பலருக்கும் எம்.ஜி.ஆரைப் பிடிக்காது ஏன் என்று கேட்டுப்பாருங்கள். கலைஞரை எதிர்த்தது மட்டுமே காரணமாகச் சொல்லுவார்கள். சிலரால் மட்டுமே கருத்து ரீதியாக காரணம் சொல்ல முடியும்.

அண்ணாவையும் கலைஞரையும் பற்றி பேசும்போதும் மண்டல் கமிஷன் பற்றி பேசும் போதும் பெரியாரும் வந்து விடுவார். தமிழகத்தில் நாமெல்லாம் மனிதர்களாக மதிக்கப் படுவதற்கு காரணமே பெரியார்தான் என்பது ஓரளவு புரிந்திருந்தது. தமிழகத்தில் பெரியார் போல அகில இந்திய இஅளவில் அம்பேத்கர் என்ற அளவில்தான் நமக்கு அம்பேத்கர் அறிமுகம். தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பெரியார் படத்தை முன்னிலைப் படுத்திக் கொள்வார்கள். ஆனால் பட்டியலினத்திற்கான கட்சிகள் கூட அம்பேத்கர் படத்தினை ஒரு ஓரத்தில் போடுவார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பேர் இருந்தாலும் உபயொகத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அண்ணா நகர், எம்.ஜிஆர் நகர், காமராஜ் நகரெல்லாம் ஊருக்குள் இருந்தாலும் அம்பேத்கர் தெரு ஊரின் கடைசியில்தான் இருக்கும். பெரியார் சமத்துவபுரம் தவிர்த்த பெரியார் நகர்களும் அரிதே.

காந்தியைப் படிக்கும்போது தவிர்க்கமுடியாமல் அம்பேத்கர் வருவார். அப்போதெல்லாம் அம்பேத்கர் செய்தது சரியே என்றே தோன்றும். சமீப காலங்களில் இணைய விவாதங்களின் மூலமாகவே அம்பேத்கர் நமக்கு புலப்பட ஆரம்பிக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது இப்போது நடக்கும் பல சதிகள் புலப் படுகின்றன. பொருளாதார அடிப்படையில் சலுகைகள். அம்பேத்கர் வெளிநாட்டில் படிக்கும்போது மன்னர் அளிக்கும் உதவித்தொகை நிறுத்தப் படுகிறது. படிப்பும் பாதியில் நின்றுவிடுகிறது. இத்தனைக்கும் அவரது தந்தை ஒரு மிலிட்டரி ரிடர்ன் .அடிப்படை சொத்து என்று ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஒவ்வொரு முறையும் எவ்வளவு போராடுகிறார் என்பது புலப்படும். இன்றைய இணையத்தில் இனிக்க இனிக்க பேசி எப்படியெல்லாம் உரிமைகளை பறிக்கப் பார்க்கிறார்கள் என்பதும் அவரது வாழ்க்கைவரலாற்றைப் படிக்க நினைத்தாலே புலப் படும். இந்தியா என்ற நாடு பாகிஸ்தான் போன்று இல்லாமல் ஒரு ஜனநாயக நாடாக இருப்பதில் அம்பேத்கரின் பங்கும் மிக முக்கியமாகவே இருந்திருக்கிறது.

பெரியாரைப் பற்றி தமிழ் ஓவியா ஓவியா மூலம் விளாவாரியாக படிக்க முடிவதை போல அம்பேத்கரை பற்றியும் விளாவாரியாக மாணவர்கள் படிக்க முடியும் சூழலை உருவாக்க வேண்டும்.

நான் கூட அம்பேத்காரை பற்றி மிக ஆரம்பத்திலேயே படித்திருந்தால் பள்ளியில் கல்லூரியில் ஏற்பட்ட சில சங்கடங்களை மென்மையாக தவிர்த்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

நாளை நெல்லையில் நடைபெறும் அம்பேத்கர் 125 தேசிய கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெறவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails