ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது முகங்களைக் காட்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு விதமான மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனடிப்படையில் பல்வேறுவிதமான இலக்கியங்களும் இதிகாசங்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
நவீன கால படைப்பாளிகளில் ஷங்கர் மிகவும் முக்கியமானவர். நாட்டில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதில் ஷங்கரின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அதைப் போன்ற ஒரு கதைதான்
கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்.
முன்குறிப்பு: இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சிறுவன் ரஜினி கூட்டல் கணக்குப் போடுவதற்கு பாசிமணிகளை உபயோகப் படுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில் எல்லோரும் வாய்ப்பாடு உபயோகப் படுத்தும் போது சிறுவன் ரஜினி கால்குலேட்டர் உபயோகப் படுத்துகிறார்.
கல்லூரிக்குச் செல்லும்போது பைக் ஓட்டுவதற்கு நவீன சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். தனியாக ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி துவக்குகிறார். அப்போது கார் ஓட்ட தனி சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். அதில் பல்வேறு நவீன வசதிகளை வைத்திருக்கிறார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக அதை உருவாக்கி உபயோகப் படுத்துகிறார். ஆட்டோ அப்டேட் வசதியை உருவாக்கி வைக்கிறார்.
அவரது கம்ப்யூட்டர் கம்பெனி உலக அளவில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு ஊர்களை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கிறார். உலக மக்கள் அனைவரும் ரஜினிகாருவை புகழ்ந்து விழா எடுக்கிறார்கள்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
பழைய பாட்டை ரீமிக்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.
பாட்டு முடிந்ததும் ரஜினிகாரு கைதுசெய்யப் படுகிறார். அவர்மீது சரமாறியாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. கழிப்பிடம் கட்ட குழிதோண்டியதில் கிடைத்த மண்ணை நாடுவிட்டு நாடுதாண்டி கொட்டியதாக கணக்குக் காட்டி பலகோடி ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்த்தாக குற்றம் சாட்டப் படுகிறது.
அவர் கைது செய்யப் பட்டதால் அவரது கம்பெனியின் ஷேர் மதிப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் அப்பாவி கிராமத்து மாணவர்கள் பொங்கி எழுகிறார்கள்.
ரஜினியின் வீட்டை சூறையாடுகிறார்கள்.
அவரது தானியங்கி சூப்பர் கம்ப்யூட்டர் சாதனம் தூக்கி குப்பை வண்டிக்குள் போடப் படுகிறது. குப்பை வண்டியில் போகும் சாதனம் ஆட்டோ அப்டேட் ஆகிறது. மனித உருவத்தைப் பெருகிறது.
குப்பை வண்டிக்குள் இருந்து ரஜினியைப் போலவே உருவ அமைப்பைக் கொண்ட எந்திரன் வெளியே வருகிறார். ( ஜீன்ஸ் படத்தைவிட அற்புதமாக வரவேண்டும் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேசன் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நானோஹார்டு கம்பெனியில் செய்து வருகிறார்கள். இவர்கள் பில்கேட்ஸுடன் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
எந்திரன் ரஜினி வெளியே வந்தவுடன் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார்.
பிபாசா பாசுவின் நடனம் பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் தூண்டுதல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை அவர் கண்டறிந்த உடனேயே பிபாசா கடத்தப் படுகிறார். பிபாசாவைப் பின் தொடர்ந்து எந்திரன் செல்கிறார். பிபாசாவை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அமெரிக்க ஜனாதிபதிமுன் நிறுத்துகிறார்கள்.
( அமெரிக்க ஜனாதிபதி பாத்திரம் தமிழ்திரையில் வருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது).
அங்கே பிபாசா மீண்டும் நடணம் ஆடுகிறார். அந்த நடனத்தைக் காண அவரின் பால்ய நண்பர்களும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த எந்திரன் அதிர்ச்சியடைகிறார். அவர்களில் ஒருவர் வினுசர்க்கரவர்த்தி. கதையில் அடுத்த திருப்பம் வருகிறது.
..........................................................................................................
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினி கல்லூரியில் படித்துவருகிறார். உலக அளவில் நடக்கும் அறிவியல் வினாடிவினால் வெற்றி பெற்றுவிட்டு விமானத்தில் வருகிறார். அப்போது ஒருபெண் அவரைப் பார்த்த உடன் காதல் கொண்டு பாட்டு பாடுகிறார். ரஜினியிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
நான் தான் மிஸ். வேர்ல்டு.
என்பதைக் கேட்ட ரஜினி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி விடுகிறார். ரஜினி படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ஐஸ்வர்யா . ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
பணம் அதிகமாய் இருந்தால் ராத்திரி தூக்கம் வராது
பொண்டாட்டி
அழகாயிருந்தால்
எப்போமே தூக்கம் வராது
என்று சொல்லிவிட்டு தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் துவக்கி உலக அளவில் பெரிய தொழிலதிபர் ஆகிறார்.
அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் மனைவி சமைத்துக் கொடுத்த உணவையே சாப்பிடுகிறார்.
ரஜினி திருமணம் செய்து கொள்ளமுடியாத ஐஸ்வர்யா கிராமத்தில் போய் தவம் செய்யத்தொடங்குகிறார்.
..................................................................................................
ஐஸ்வர்யாவின் தந்தைதான் வினுசர்க்கரவர்த்தி. தன் மகள் சாமியார் ஆக காரணமாய் இருந்த ரஜினியைப் பழிவாங்க
தனது பால்ய நண்பன் அமெரிக்க ஜனாதிபதியை அனுகிறார். அவரது செல்வாக்கினைப் பயன்படுத்தி ரஜினியின் கம்ப்யூட்டர் கம்பெனியில் பல ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள்'
அமெரிக்க ஜனாதிபதியை தனியே சந்தித்த எந்திரன் நடந்த உண்மைகளைச் சொல்ல ஜனாதிபதி திருந்திவிடுகிறார். ரஜினியைக் கொல்ல வினுச் சர்க்கரவர்த்தி ஆட்களை அனுப்புகிறார். அவரைக் காப்பாற்ற எந்திரன் பறந்து வருகிறார்.
வான் வழியிலேயே அவரைத்தடுக்க முயற்சிகள் நடக்கின்றன். பலத்த சண்டைக்குப் பின்னர் முதலாளி ரஜினியும் எந்திரன் ரஜினியும் ஐஸ்வர்யாவின் கிராமத்திற்கு செல்கின்றனர். சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா தவம் கலைந்து எழுந்து விடுகிறார். ரஜினியைப் பார்த்து
இன்னும்
கல்லூரி மாணவன் மாதிரித்தான் இருக்கறீங்க
என்று சொல்கிறார். அதற்கு ரஜினி
நீ 94ல தான் மிஸ். வேர்ல்டு
நான் எப்பவுமே மிஸ்டர். வேர்ல்டு
என்று கூறுகிறார். மனம் திருந்திய ஐஸ்வர்யா ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.
சத்தியமே லட்சியமாய் கொள்ளலடா
பாட்டுடன் கதை நிறைவடைகிறது.