Sunday, March 27, 2011

எது இலவசம்?

தமிழக தேர்தலில் தேர்தல் அறிக்கையை வைத்துக் கொண்டு பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழன் இலவசத்திற்கு விலை போகிறானாம். இலவசம் என்றால் என்ன என்றே தெரியாத பெருந்தகைகள் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அரசு என்றால் என்ன? அரசின் கடமை என்ன? என்று கூட தெரியாமல் இலவசங்களைப் பற்றி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


மக்களுக்கு தன்னிறைவான வாழ்க்கையைத் தருவதுதான் உண்மையான அரசின் கடமையாக இருக்கமுடியும்.  அனைத்து மக்களுக்கும் குடியிருக்க உறைவிடம், அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி, பாதுகாப்பு, தரமான உணவு, குறையே சொல்ல முடியாத மருத்துவ வசதி போன்றவைகளை மக்களுக்குத் தருவதுதான் சிறந்த அரசாக இருக்க முடியும்.

இன்றைய தினத்தில் அனைத்திற்கும் அடிப்படை கல்வியாகவே இருக்கிறது. கல்வியைப் பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமெனில் அதைக் களைய வேண்டியது அரசின் கடமைதான்.  புருனோ போன்ற பதிவர்கள் எழுதும்போதெல்லாம் சொல்லுவார்கள்.  டான் பாஸ்கோ போன்ற பள்ளிகளில் கிடைக்கும் கல்விக்கு எந்த விகிதத்திலும் குறைவில்லாத வகையில் கடைக் கோடி கிராம மக்களுக்கும் கிடைக்கும் சூழல் வரவேண்டும்.  சென்னையிலுள்ள தனியார்பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்கு அவன் பெற்றோர் பிறக்கும் முன்பே முன்பதிவு செய்து ஒவ்வொரு தினத்திற்கும் சில ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் என்றால் அதே செலவினை அன்றாடக் காட்சி தன் மகனுக்குச் செய்ய முடியுமா? அப்படியென்றால் அதை வழங்க வேண்டியது அரசின் கடமையல்லவா? அப்படி வழங்கினால் அதன் பெயர் அரசாட்சியா?  இலவசமா?

மதிய உணவுத் திட்டத்தின் பின்னர் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது சரித்திரம். பின்னர் சீருடை, புத்தகங்கள், குறிப்பேடுகள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் வழங்கப் படுகின்றன. பின்னர் சைக்கிள்கள் கொடுத்தார்கள்.  இதெல்லாம் நாட்டின் கல்வியை வளர்க்கத் தேவையான அடிப்படைகள். இதை முழுமையாக கொடுக்கவேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் பெரும்பாண்மையான மாநிலங்களுக்கு முன்பே தமிழகம் வழ்ங்குகிறது என்றால் தமிழகம் ஒளிர்கிறது என்றுதான் பொருளே தவிர இதில்  விமர்சிக்க ஒன்றும் இல்லை.

மாணவர்களுக்கு புத்தகங்கள். பேனாக்கள், குறிப்பேடுகள் கொடுத்த அரசு மடிக் கணினி வழங்குவதும் காலத்தின் கட்டாயம் அல்லவா..,  ஒரு மாணவன் அவனது முழுத் திறமைக்கேற்ப படிக்க நினைக்கும் அளவிற்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை என்பதையும் பொருளாதாரம் எந்த இடத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்பதையும் இலவசங்களை விமர்சிப்பவர்களே ஏற்றுக் கொள்வார்கள். 


எட்டு ரூபாய் மானியம் கொடுத்து 3.50க்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்த அரசு  ஒரு ரூபாய் செலவில் கொடுத்த போது விமர்சிக்கிறார்கள்.  இதெல்லாம் விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தானே தவிர வேறென்ன இருக்க முடியும். குறைந்த பட்ச அளவு அரிசியை மக்களுக்கு அடிப்படை உரிமையாக முழு மானியத்தையும் ஏற்றுக் கொண்டு வழங்குவது கூட மக்களாட்சியின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.


கிராமங்களில் அங்கன்வாடி மையங்களை வந்து பாருங்கள். எத்தனை பெற்றோர் அந்த மையங்களை நம்பி  குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள் என்பது புரியும். அந்த நம்பிக்கையை வழங்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?

இன்றைய தமிழகத்தில் தொலைக்காட்சி மூலம் ஒரே மக்கள், ஒரே சூழல், ஒரே பண்பாடு என்பது உருவாகி வருகிறது அல்லவா.., மக்களின் சிந்தனைகள் சீரியல்களின் அடிப்படையில் இருந்தாலும் கூட பேச்சு மொழிகள் கூட ஓரளவு வித்தியாசம் குறைந்து வருகின்றன.  நல்ல தூய்மையான உடைகள், பளிச்சென்று இருக்கவேண்டும் என்ற எண்ணம், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் பெண்கள் படித்தால் அவர்களது வாழ்க்கைப் போராட்டத்திற்கு உதவும் போன்ற எண்ணங்கள் பல தொலைக்காட்சித்தீமைகளுக்கு நடுவிலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மிக்ஸி கிரைண்டர் போன்றவை வரும்போது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயர்ந்து தான் போகும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் சுமையைக் குறைப்பதும்  அரசின் கடமைதானே..,

இலவசமாக வீடு வழங்குவது என்பதும் கூட விமர்சிக்கப் படுகிறது. உண்மையில் அனைத்து குடியிருப்புகளையும்கூட அரசு பொதுவுடமையாக்கிவிடலாம்.  குறைந்த பட்ச வசதி கொண்ட வீடுகளை மக்களுக்கு குடியிருக்க இலவசமாகவும், சற்று வசதிகள் கூடக் கூட அந்த வீட்டுக்காண வாடகையை சற்று அதிகமாக்கி அரசுக்குச் செலுத்தச் சொல்லலாம். ஏற்கனவே தண்ணீர்வரி, மின்சார வரி போன்றவைகளை மக்கள் தொடர்ச்சியாக செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன்மூலம்  குடியிருப்புகளையும் இலவசமாகக் கொடுக்க முடியும். தனிநபர்கள் சொத்துக் குவிப்பதையும் தடுக்க முடியும்.  இது இப்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாவிட்டால்கூட  வருமைக்கோட்டிக்கு கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச வீடுகளை வழங்கும்போது மக்கள் தொகையை பரவலாக்கப் படுகிறது.   குறைவான எண்ணிக்கையில் கொடுத்தால் மட்டுமே  அதை பிறருக்கு வாடகைக்கு விடுவது என்பது வரும்.  சற்று வசதியான வீடுகளை அரசே மக்களுக்கு விற்பனை செய்யலாம். ஹவுசிங் போர்டு ஏற்கனவே செய்வது தான் என்றாலும் பெரிய அளவில் செய்தால் இதில் இருக்கும் மனக் கசப்புகள் அகலும்.


திருமண உதவித்தொகைகள் வழங்கப் பட்டு வருகின்றன.  திருமணத்தையே அரசு நடத்தி வைத்துவிடலாம்.   இவ்வாறு திருமணத்தை அரசு நடத்தினால் குழந்தை திருமணத்தை தவிர்த்து விட முடியும். மக்களுக்கு  திருமணம் என்ற பெயரில் ஏற்படும் மிகப் பெரிய கடன் சுமைகள் குறையும். கோவில்களில் அன்னதானம் வழங்குவது போல திருமணத்தின்போது சாப்பாட்டையும் அரசே போட்டுவிடலாம்.

இலவசமாக ஆடுகள், கன்றுகள் வழ்ங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ந்டைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியை பலரும் கேட்கிறார்கள்.  படிப்படியாக செய்தால்கூட இது ஒரு மாபெரும் திட்டம் அல்லவா? கண்டிப்பாக எந்த அரசு வந்தாலும் இதைச் செய்வார்கள்.  இதில் பாதிப் பேர் விற்றுத் தின்றாலும்கூட மீதம் இருப்பவர்கள் அதை வளர்ப்பார்கள். உழைக்கும் எண்ணம் பெரும். கால்நடைகள்மூலம் கிடைக்கும் வருமாணம் நிரந்தரமாகவும், உடலுழைப்பு மட்டுமே மூலதனமாக இருப்பதால் பலரும் நல்ல நிலமைக்கு வந்து விடுவார்கள்.  கால்நடைகளை வாங்கு விற்றவர்கள்கூட மீண்டும் அந்த வேலையை செய்ய தொடங்கினாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.  மறைமுகமாக இறைச்சியின் விலையும் நன்கு குறையும். ஆனால் இறைச்சிவிலை  குறைந்தாலும் உற்பத்தியாளர்களுக்கு வருமான இழப்பு வராது. எவ்வளவு பெரிய பொருளாதார சூத்திரம் இது.

உண்மையில் இலவசங்கள் என்பவை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அவசியமானதும் அத்தியாவசியமானதும்கூட..., 

4 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்! இவை இலவசங்கள் அல்ல! மக்கள் நலத் திட்டங்கள்! இதுவே உண்மையான கம்யூனிஸ பாதை!

    என்ன அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து, இப்பவே அரசு கடன் வாங்குகிறது! ஒரு லட்சம் கோடிகள் கடன், தமிழகத்திற்கு! குஜராத்க்கு, ஒரு லட்சம் கோடி டெப்பாசிட் வைத்துள்ளது!

    ReplyDelete
  2. //குஜராத்க்கு, ஒரு லட்சம் கோடி டெப்பாசிட் வைத்துள்ளது!//

    மறுமொழி இங்கே உள்ளது நண்பரே

    ReplyDelete
  3. ஏதாவது சந்தேகம் என்றால் விளக்கத்தயார்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails