உன் மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு புத்தகம் வாங்கிக் கொடு
என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்.
புத்தகங்கள் சில எழுத்துக்கள் மூலம் எண்ணங்களையும் கருத்துக்களையும் குவித்து வைத்திருக்கும் இடம். அந்த புத்தகங்கள் ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும். வாழ்வின் அடிப்படை ஆதாரங்களையும் அவசியங்களையும் கற்றுக் கொடுப்பவை புத்தகங்கள். மனப்பாடம் செய்து ஒப்புவிக்க அல்ல, மனதில் பதித்து ஒத்து வாழ வழி செய்பவை புத்தகங்கள். பகுத்தறிவினை பரவலாக்க உதவுபவை புத்தகங்கள்.
செய்தித்தாள்களையும் கூட புத்தகங்களாகக் கொள்ளலாம். இப்போதெல்லாம் படிக்கும் வழக்கம் குறைந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். படிப்பவை அப்படியே மனதிற்குள் காட்சிப் படுத்திக் கொண்டே செல்வது படிப்பின் உச்ச கட்டம். ஆனால் கற்பனை செய்ய சோம்பல் படும்போது வந்தது தான் நாடகம் அதன் அடுத்த கட்டமாக திரைப்படமும் சின்னத்திரையும் இருக்கின்றன், அவைகளும் ஒரு வடிவில் புத்தகங்கள்தான். ஆனால் நமக்கு என்றுமே போதைச் சுவையில்தான் விருப்பம் செல்லும் அல்லவா அதுபோல புத்தகப் படிப்பு என்பதும் வடிவம் மாறிக் கொண்டேதான் செல்கிறது.
எப்படி இருந்தாலும் அடிதடி, வெட்டி நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தாலும்கூட கற்பனையை வளர்க்கும் வடிவிலான பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களைப் படிக்கும்போது புத்தகங்களின்பால் ஒரு பிடிப்பு உருவாகிவிடுகிறது.
எப்படி எப்படியோ சுற்றிக் கொண்டிருந்த நான் இப்போது முகநூலில் பகிர்ந்து கொள்ளவும் நண்பர்கள் பகிரும் விஷயங்களுக்கு பதில் சொல்லவுமாகவே பல அரிய, முக்கிய விஷயங்களைப் படிக்க வேண்டியுள்ளது.
எனவே கண்டிப்பாக படித்தல் என்பது அடுத்த கட்டத்திற்குச் சென்று மீண்டும் ஒருமுறை அறிவுப் புரட்சி மலரும்போலத்தான் தோன்றுகிறது.
இவ்வாறாக இணைய நண்பர்களுக்கு வசதியாக பதிப்பகத்தாரும் தங்கள் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களை மட்டுமாவது இலவச மின்னூலாக வழங்கினால் சமூக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இன்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
No comments:
Post a Comment