ஜான் டேவிட் 1996-97 களில் பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்ற பெயர். உச்ச நீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு பின்னர் மீண்டும் பத்திரிக்கைகளில் இடம் பெற்று வருகிறது. சுடச் சுட செய்திகளையும் விமர்சனஙகளையும் தரும் வலைப்பூக்கள் மீண்டும் அந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு வருகின்றன. இந்த இடுகை அந்த நிகழ்ச்சி பற்றியோ தீர்ப்புக்கள் பற்றியோ பேசப் போவதில்லை. குறிப்பாக ராக்கிங்கிற்கு துளிகூட ஆதரவு தரப் போவதில்லை. ராக்கிங் ஒழிய காரணமானவர்களை கைகூப்பி நன்றி சொல்பவர்களில் நானும் ஒருவந்தான்.
தீர்ப்பு வெளிவந்த உடன் வந்த இடுகை ஒன்றில் பின்னூட்டம் போட்டவர்கள் சொன்ன சில வார்த்தைகளே என்னை இதை எழுதத் தூண்டின.
ஒரு நபர் தன்னை ஜான் டேவிட்டுடன் படித்ததாக அறிமுகப் படுத்திக்க்கொண்டு ஜான் டேவிட் பள்ளியிலேயே கராத்தா கற்றுக் கொண்டு ஒரு அடிதடிப் பையனாக இருந்தார் என்று கூறுகிறார்.
படிக்கும் காலங்களில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வது என்பதும், தவறுகளைப் பார்த்துக் கோபப் படுவதும் என்னைப் பொறுத்தவரை மிகவும் நல்ல விஷயங்கள். பள்ளிக் காலங்களில் வரும் கோபத்தால் வரும் பின்விளைவுகளையும் அதனை சமாளிக்கும் வல்லமையும் பள்ளிக் காலத்திலேயே வருவது மிகப் பெரிய வரம். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நமக்கு உதவ பெற்றோர் நண்பர்கள் என்று பலரும் வருவார்கள். பிற்காலத்தில் அதே தவறை நாம் செய்தால் நமக்கு உதவ மிகச் சிலரே வருவார்கள் அவர்களும் யோசித்துத்தான் செய்வார்கள். கல்லூரிக் காலங்களில் இது போன்ற தவறுகளைப் பார்த்து பொங்கும் இயல்புடையவர்கள்தான் மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை நடத்த முடியும். மாணவர் பேரவை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய நிறுவனத்தை வழிநடத்துவது போன்ற அதில் கிடைக்கும் அனுபவங்கள் விலை மதிப்பற்றவை.
இன்னொரு பெருந்தகை அவன் முகத்தைப் பார்த்தாலே சகிக்கவில்லை. வில்லன் போல உள்ளது என்கிறார். அகத்தின் அழகு முகத்தில் என்று சொன்னால்கூட அவரவர் பார்க்கும் கோணத்தில்தான் அது அமையும். முகம் என்பது நம்மால் விரும்பிப் பெற்றுக் கொள்வது அல்ல. நம் முன்னோர் நமக்கு அளிக்கும் சொத்து. அது தவிர அவரவர் வழித்தோன்றல்களே அவரவர்க்கு அழகாகத் தெரிவார்கள். உலக அழகி லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் இந்திய மக்களுக்கு அழகிகளாகவா தெரிந்தார்கள். மேற்கத்த்தியவர்க்கு மேற்கு அழகு, கிழக்கத்தியவற்கு கிழக்கு அழகு .அழகு என்று மெச்சிக் கொள்ளலாமே தவிர ஒரு குறிப்பிட அமைப்பில் முகம் உடையவர்களை கொடியவர்கள் என்று சொல்ல யார் அவர்களுக்கு உரிமை கொடுத்தது?
உங்களுக்கு அந்த முக அமைப்பு பிடிக்கவில்லை என்றால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் அவ்வளவுதான் சொல்லமுடியும்.
எங்கள் கல்லூரியில் மூத்த நண்பர் இருந்தார். அவரது நடந்து போனாலே இளையவர்கள் பயந்து நடுங்குவார்கள். எனக்குத் தெரிந்து யாரையும் அவர் அடித்ததோ, திட்டியதோ கிடையாது. அவர் பார்வையே ராஜபார்வை என்று சொல்லலாம். அவரது வகுப்பு மாணவர்களுக்கு அவர் மிக இனிமையானவர். எங்களைப் போல சில இளையவர்களுக்கு அவர் இனிமையானவர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். கல்லூரியின் பெரும்பகுதி மாணவர்கள் பயந்து நடுங்கிய அவர் நிர்வகிக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ஆண்டு ஐ.எஸ். ஓ 9000 தரச் சான்று இந்த ஆண்டு பெற்றிருக்கிறது. நெய்வேலிப் பகுதியில் இருக்கிறது அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஒரு அரசு அலுவலகம். அதுவும் ஏழை எளிய மக்கள், பிணியாளர்கள் தினமும் வந்து போகும் இடம் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என்றால் அதன் நிர்வாகி எவ்வளவு பெரிய ஆளுமைத் திறன் பெற்றிருக்க வேண்டும். அவரைப் பார்த்து பயந்தவர் இன்று வாய் பிளந்து நிற்கிறார்கள். அவரது சக மருத்துவர் சொன்னார் அண்ணாச்சியைப் பார்த்து அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் பயம். அவர் சொன்னால் உடனே அதை செய்துவிடுவார்கள் அதனால்தான் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மிக எளிதில் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதல் பெற முடிந்தது என்றார்.
எப்படித்தான் நம் மக்கள் ஒரு நபர் பள்ளிக் கல்லூரியில் துடுக்காக இருப்பதையும் முகம் தமிழ் மண்ணோடு கலந்து இருப்பதையும் வைத்து ஒரு முடிவு கட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.
====================================================
1996 நிகழ்ச்சி என்பது விபத்து. அதில் பாதிக்கப் பட்டவர் ஓரேயடியாய் போய்விட்டார். அவர் பெற்றோரும் அறப்பணிகள், கல்விப்பணிகள் என்று காலந்தள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பாதிப்பை ஏற்படுத்தியவர் குடும்பத்திற்கு மாறாத ரணமாக மாறி அழுந்திக் கொண்டே இருக்கிறது. கல்வியாளர்களும் அந்த விபத்தினைப் பயன்படுத்தி ராக்கிங்கை பெருமளவு ஒழித்து விட்டார்கள். கடும் சட்டங்களையும் கொண்டுவந்து விட்டார்கள்.
============================================================
=====================================================================
இந்த மாதிரி படங்கள் இந்தியாவில் 1957லேயே வந்துவிட்டன. இன்னும் நம் மக்கள்தான் உணர மறுக்கிறார்கள்